• India
```

நல்ல இலாபம் தரும் ஐந்து தள்ளு வண்டி கடை தொழில்கள்!

Top 5 food Cart Business in Tamilnadu | Thallu Vandi Kadai Business

By Dharani S

Published on:  2024-09-24 12:42:37  |    2296

Top 5 food Cart Business in Tamilnadu -ஏதாவது ஒன்று செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் எளிதாக துவங்க முடிகின்ற ஒரு தொழில் தள்ளு வண்டி கடைகள் தான், அந்த வகையில் நல்ல இலாபம் தருகின்ற ஒரு ஐந்து தள்ளு வண்டி கடை தொழில்கள் குறித்து பார்க்கலாம்.

1) தள்ளு வண்டி இட்லி கடை

பொதுவாக சூரியன் உதிப்பதற்கு முன்னதாகவே பலரும் தற்போதெல்லாம் வேலைக்காக ஓட ஆரம்பித்து விடுகின்றனர். மூட்டை தூக்குபவர்கள், பலசரக்கு கடை தொழில் செய்பவர்கள், ஐடி ஊழியர்கள், மார்னிங் ஷிப்ட் ஊழியர்கள் என பலரும் தற்போதெல்லாம் அதிகாலை முதலே ஓடிக் கொண்டு இருக்கின்றனர். அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கும் அந்த பொழுதில் சரியான இடத்தில், இட்லி, தோசை, வடை வைத்து ஒரு தள்ளு வண்டி கடை போட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஓட்டினால், குறைந்த பட்சம் ஒரு 1,500 முதல் 2,000 வரை இலாபம் பார்க்கலாம்.

2) தள்ளு வண்டி வடை கடை

ஒரு பரபரப்பான இடத்தில் ஒரு மதியத்திற்கும், அந்தி சாயும் நேரத்திற்கும் இடையில் ஒரு 3 மணி அளவில், சூடாக வடை வகைகள், வாழைக்காய் பஜ்ஜி, முட்டை பஜ்ஜி போட ஆரம்பித்து அதை சட்னியோடு வைத்து விற்கும் போது சும்மா கூட்டம் அள்ளும். வேலை செய்து களைத்து போன பலருக்கும் ஏதாவது சாப்பிட்டு விட்டு வருவோமோ என மூளை சொல்லும் நேரம் அது. ஒரு 3 மணி முதல் 7 மணி வரை என நான்கு மணி நேரம் பார்த்தாலே ஒரு 1,000 வரை இலாபம் பார்க்க முடியும்.


3) தள்ளு வண்டி பானி பூரி கடை

பொதுவாக பானி பூரியையும் மக்கள் அந்தி சாயும் நேரத்தில் தான் தேடுவார்கள், ஒரு 3 மணி அளவில் ஆரம்பித்து, சூடாக பானி பூரி, ரச பூரி, மசால் பூரி என பூரி வ்கைகளில் பல வகைகளை வைத்து, கூடவே மசால் சுண்டல் உள்ளிட்டவைகளையும் விற்று வந்தால் அளைத்து களைத்தவர்களுக்கு ஒரு குட்டி சாப்பாடாகவே அது அமையும். 3 மணியில் இருந்து 8 மணி வரை என 5 மணி நேரம் கடையை ஓட்டும் போது ஒரு 1,000 முதல் 1,200 வரை இலாபம் பார்க்கலாம்.

4) தள்ளு வண்டி குழம்பு கடை

பொதுவாக வேலைக்கு அவசரம் அவசரமாக ஓடுபவர்களுக்கு தற்போதெல்லாம் காய்கறி, வெட்டி கறி வெட்டி குழம்புகளை வைக்க நேரம் இல்லை, குக்கரில் ஒரு இரண்டு விசில் சாதம் வைத்து குழம்பை வெளியில் வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர். பெரும்பாலும் அவ்வாறு வாங்குபவர்கள் ஏதாவது ஒரு ஹோட்டலில் சென்று தயங்கி தயங்கி தரமசங்கடமாக கேட்டு வாங்குவார்கள், அதன் காரணமாகவே தற்போது பெரும்பாலான இடங்களில் குழம்பு கடைகளை பார்க்க முடிகிறது, மீன் குழம்பு, சாம்பார், கிரேவி, ஏதாவது ஒரு கூட்டு பொறியல் வைத்து 30-50 வரை மதியமும், இரவும் தள்ளு வண்டியில் வைத்து ஓட்டினால் ரூபாய் 1,000 முதல் 1,200 வரை இலாபம் பார்க்கலாம். 

5) தள்ளு வண்டி சம்சா கடை

இதுவும் அந்தி சாயும் நேரத்தில் ஆரம்பித்தால் அமோகமாக நடக்கும் ஒரு கடை தான், சிக்கன் சம்சா, காய்கறி சம்சா, முட்டை சம்சா என பல வகைகளில் சூடாக செய்து, நீங்களே தக்காளி சாஸ்சும் செய்து ரெண்டு சம்சா கொஞ்சம் தக்காளி சாஸ் என பிளேட்டில் வைத்து விற்பனை செய்தால் கூட்டம் சும்மா அள்ளும். சாயங்காலம் ஒரு 3 மணி முதல் இரவு 7 மணி வரை என ஒரு நான்கு மணி நேரம் வைத்து ஓட்டினால் ரூபாய் 1,000 முதல் 1,200 வரை இலாபம் பார்க்கலாம்

இந்த ஐந்து தள்ளு வண்டி கடைகளுமே சரியான இடம் அமையும் பட்சத்தில் சிறந்த இலாபம் தரும் தரும் தள்ளு வண்டி தொழில்கள், தள்ளு வண்டி கடையை பொறுத்த வரை ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால் ஒரு இடத்தில் பெரிய வியாபாரம் இல்லை என்றால் இன்னொரு இடத்திற்கு தள்ளிக் கொண்டே சென்று விடலாம். அதனால் தைரியமாக இறங்கலாம் தள்ளு வண்டி தொழிலில் .