• India
```

இல்லத்தரசிகளுக்காக மாதம் 50,000 வருமானத்தில்...இட்லி மாவு தொழில்...!

Idli Maavu Business Ideas Tamil

By Ramesh

Published on:  2024-10-18 08:25:39  |    1501

Idli Maavu Business Ideas Tamil - இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தே மாதம் 50,000 சம்பாதிக்கும் வகையில் இட்லி மாவு தொழில் எப்படி செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Idli Maavu Business Ideas Tamil - இட்லி மாவு தொழிலில், முதலீடு என்ன, இலாபம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

முதலீடு எவ்வளவு?

நீங்கள் கமெர்சியலாக இட்லி மாவு அரைத்து விற்கப்போகிறீர்கள் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் கிரைண்டர் சரி வராது, அப்படியே அரைத்தாலும் தினமும் அரைக்கும் போது ஒரு மாதத்திலேயே காயில் எல்லாம் எரிந்து போக வாய்ப்பு இருக்கிறது, ஆதலால் ஒரு கமெர்சியல் கிரைண்டர் நிச்சயம் அவசியம். கமெர்சியல் கிரைண்டர் நிறைய வகைகளில் கிடைக்கிறது. 

1 மணி நேரத்திற்கு 12 கிலோ வரை அரைக்கும் வகையில் உள்ள கிரைண்டர் 13,000 ரூபாய், 1 மணி நேரத்தில் 18 முதல் 20 கிலோ வரை மாவு அரைக்கும் கிரைண்டர் 26,000 ரூபாய் வரை சந்தைகளில் விற்கிறார்கள், நேரடியாக கோயம்புத்தூர் சென்றால் இன்னுமே நிறைய வெரைட்டிகள் கிடைக்கிறது, நீங்களாகவே சென்று உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் 20 கிலோ வரை ஒரு மணி நேரத்தில் அரைக்க கூடிய மெசின் இருந்தால் கமெர்சியல் பர்போஸ்க்கு நல்லது.


கிரைண்டர் தான் உங்களுக்கான முதல் முதலீடு, அதுபோக அரிசி, உளுந்து எல்லாம் உங்களது தினசரி முதலீட்டில் சேரும், அதையும் உங்களுக்கு இலாபகரமான முறையில் நேரடியாக மில்களுக்கே சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம், கடைகளில் ஒரு கிலோ இட்லி அரிசி 45 ரூபாய் எனில், மில்களில் 30 ரூபாய்க்கு வாங்கி விடலாம். உளுந்தும் கடைகளில் 140 வரை விற்கிறார்கள். மில்களில் நீங்கள் கிலோ 110 ரூபாய்க்கே மூடையாக எடுத்துக் கொள்ளலாம்.

சரி இலாபம் எப்படி இருக்கும்?

1 கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து போட வேண்டும், அப்படி என்றால் ஒரு நாளைக்கு 25 கிலோ அரிசி அரைக்கிறீர்கள் என்றால் 5 கிலோ உளுந்து போட வேண்டும், இட்லி பஞ்சு பஞ்சாக வர வேண்டும் என்று இதற்கு அதிகமாக உளுந்தை நீங்கள் போடும் பட்சத்தில் இட்லி அவிக்கும் போதே உதிர ஆரம்பித்து விடும், தோசையும் சரியாக கல்லில் சரியாக வராது, ஆதலால் சரியான கன்ஸிஸ்டன்ஸி என்பது மிக மிக முக்கியம்.


நீங்கள் 25 கிலோ அரிசி, 5 கிலோ உளுந்து என இரண்டையும் சேர்த்து அரைக்கும் போது குறைந்தபட்சம் ஒரு 60 முதல் 62 கிலோ வரை இட்லி மாவு வரும், 25 கிலோ அரிசி மொத்த விலை 750 ரூபாய், 5 கிலோ உளுந்து மொத்த விலை 550 ரூபாய் என்னும் போது, மொத்தமாக 1300 ரூபாய் அசல் விலையாகும், இது போக ஒரு நாள் மாவு அரைப்பிற்கு எடுத்துக் கொள்ளும் மின்சாரம் 50 ரூபாய் சேர்த்து 1,350 அசலாக கொள்வோம்.இப்போது உங்களிடம் 60 கிலோ மாவு இருக்கிறது. 

ஒரு கிலோ மாவு 40 ரூபாய் என விற்பனை விலை நிர்ணயித்தால் ஒரு நாளுக்கான வருமானம் மட்டும் 2,400 ரூபாய், ஒரு மாதத்திற்கு வீட்டில் இருந்தே 72,000 வரை சம்பாதிக்க முடியும், இதில் இலாபம் மட்டும் தனியாக 30,500 ரூபாய் இருக்கும், இது போக நீங்கள் தினசரி ஹோட்டலுக்கு மாவு அரைத்துக் கொடுக்கலாம், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் என விலை நிர்ணயித்து அரைத்துக் கொடுத்தால், அதிலும் இலாபம் தனியாக வரும். மொத்தத்தில் மாவு அரைக்கும் தொழில் பெண்கள் வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஒரு அருமையான தொழில்.