Laddu Box Success Story - ஹைதராபாத் பொறியாளர்கள் தம்பதியின் லட்டு பாக்ஸ் பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Laddu Box Success Story - ஹைதராபாத்தை சேர்ந்த சந்தீப் மற்றும் கவிதா, இருவருமே மென்பொருள் பொறியாளர்கள், இருவருக்குமே மாதம் நல்ல வருமானம் வந்தாலும் கூட சந்தீப்பின் ஆசை என்பது தொழில் ஏதாவது துவங்க வேண்டும் என்பது தான், அது அவருக்குள் ஒவ்வொரு நாளும் மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருந்து இருக்கிறது, பின்னர் ஒரு கட்டத்தில் தனது 5 வருட கார்பரேட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னார்.
2019 ஆம் இந்தியா வந்த சந்தீப், ஒரு ஐந்து முதல் ஆறு மாதம் இந்தியா முழுக்க சுத்தினார், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் உணவுகள், ஸ்வீட்ஸ்கள், தின்பண்டங்களை நன்கு உற்று நோக்கினார், பொதுவாக இங்கு அனைவருக்குமே அனைத்தையும் ருசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஆரோக்கியத்தையும் ஒவ்வொருவரும் கருத்தில் கொள்கின்றனர்.
இது தான் அவர் உணர்ந்தது, அதாவது வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான ஒன்றையும் தயாரிக்க வேண்டும், அதே சமயத்தில் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என உணர்ந்து லட்டுகள் தயாரிக்க முடிவெடுத்தார், அதே சமயத்தில் வெள்ளை சீனிகள் சேர்க்காமல், இயற்கையான மண்டவெல்ல, அச்சுவெல்லங்கள் மூலம் லட்டுகளை தயாரித்தார்,
அவரின் ஆரம்ப முதலீடு என்பது வெறும் ஒரு இலட்சம் தான், முதலில் ஒரு குறிப்பிட்ட சந்தைக்குள் தனது லட்டு பாக்ஸை புழக்கத்தில் விட்டு வரவேற்பு நன்கு கிடைக்கவே, தயாரிப்பையும் லட்டின் வகைகளையும் அதிகப்படுத்தினார், கடைகள், கார்பரேட் ஆபிஸ்கள், பண்டிகைகள் என எல்லா இடங்களிலும் லட்டு பாக்ஸ் கொடிகட்டி பறந்தது,
" இயற்கையான முறையிலும், எந்த பதப்படுத்தியும் சேர்க்காமலும், எந்த நிறமியும் சேர்க்காமலும், இயற்கையான இனிப்பின் மூலம் ஆகவும் லட்டு பாக்ஸ் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்றால் ஐயமில்லை "