Best Business Ideas In Tamil -10ஆம் வகுப்பு விடுமுறையில் பயனுள்ள யோசனையை உருவாக்கிய ஸ்ரத்தா தவான், இன்று மகாராஷ்டிராவில் தனது "ஸ்ரத்தா ஃபார்ம்ஸ்" என்ற நிறுவனத்தை 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அளவிற்கு வளர்த்துள்ளார். பள்ளி படிப்பை தொடர்ந்தபடியே, பால் விற்பனையில் வெற்றியடைந்தார்.
Best Business Ideas In Tamil -மகாராஷ்டிராவில் அகமது நகரைச் சேர்ந்த ஸ்ரத்தா தவான் என்ற சிறுமி, தனது 10ஆம் வகுப்பு விடுமுறையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தியதால்,இன்று ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
ஸ்ரத்தாவின் தந்தை எருமை மாடுகளை வாங்கி விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டிருந்தார். வீட்டில் எப்போதும் எருமை மாடுகள் இருக்கும் சூழலில், பத்தாம் வகுப்பு விடுமுறையில் தந்தைக்கு உதவி செய்யச் சென்ற ஸ்ரத்தா, எருமை மாடுகளை எவ்வாறு தேர்வு செய்வது மற்றும் அதனின் விலையை நிர்ணயிப்பது போன்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டார். இதன் மூலம், பள்ளி படிப்பை தொடர்ந்துகொண்டே பால் விற்பனையைத் துவங்கினார்.இவர் விடியற்காலையிலேயே 4 மணிக்கு எழுந்து பால் கறந்து, விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டு, 8 மணிக்கு கல்லூரிக்கு செல்வார். மாலையில் மாடுகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்.
2013-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த சிறிய முயற்சி, 2017-ஆம் ஆண்டில் "ஸ்ரத்தா ஃபார்ம்ஸ்" என்ற நிறுவனமாக உருவெடுத்தது. அப்போது 30 எருமை மாடுகளுடன் துவங்கிய இந்த நிறுவனம், தற்போது 130 மாடுகளை பராமரிக்கிறது. ஸ்ரத்தா, பாலில் இருந்து நெய், மோர், லஸ்ஸி, தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவர் தயாரிக்கும் நெய் முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மின்சாரம் தயாரிக்கவும், உரம் தயாரிக்கவும் மாடுகளின் கழிவுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். 2024 ஆம் நிதி ஆண்டில், ஸ்ரத்தா ஃபார்ம்ஸ் நிறுவனம் 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதுடன், 8 லட்சம் பேர் அடங்கிய மாபெரும் கம்யூனிட்டியையும் உருவாக்கியுள்ளது. இதில் விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் உள்ளனர். மேலும், இளம்பெண் ஸ்ரத்தா விவசாயிகளுக்கு பால் தொடர்பான தொழில்களில் பயிற்சியளிக்கிறார், இதுவரை 5,000 பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.