• India
```

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் ஆட்டுச் சந்தை.. இத்தனை கோடிக்கு வியாபாரமா?

[goat sale in namakkal district]

By Dhiviyaraj

Published on:  2025-01-13 19:20:56  |    6

நாமக்கல், புதன் சந்தை, சேந்தமங்கலம், இராசிபுரம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் போன்ற சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.

இதில் விற்பனை செய்யப்படும் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் அனைத்தும் தரமானதும் ஆரோக்கியமானதும் இருப்பதால், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

நாமக்கல் ஆட்டு சந்தை ஆடுகளின் தரம் மற்றும் விலை நிலைப்பாட்டினால் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வியாபாரிகள் கேரளா மாநிலத்திலிருந்து அதிக அளவில் வருகை தருவது, அந்த மாநிலத்தில் உள்ள மாமிச உணவகங்களின் மொத்த சந்தைக்கு இங்கிருந்து ஆடுகள் கொண்டு செல்லப்படுவதையே பிரதிபலிக்கிறது.


சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டு சந்தையில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இவற்றில் வெள்ளாடுகளும் செம்மறி ஆடுகளும் சிறப்பு இடம் பெற்றன.

இந்நிலையில் ஆடுகளின் எடைக்கு ஏற்றவாறு, ஆடு ஒன்று குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக கூறப்படுகிறது. இந்த ஆட்டுச் சந்தையில் 1.50 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.