PVR Cinema Theatre -மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர் பிரபலமான பிவிஆர் ஐநாக்ஸ், சரியாக செயல்படாத 70 திரையரங்குகளை 2024-25 நிதியாண்டில் மூட உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும்,வருவாயை அதிகரிக்க, முக்கியமான இடங்களில் புதிய திரைகள் தொடங்கும் திட்டங்கள் மற்றும் சொத்து விற்பனையைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
PVR Cinema Theatre -நாடு முழுவதும் பல மால்களில் மல்டிபிளக்ஸ் சினிமா திரைகளைக் கொண்டுள்ள இந்த பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம், போதுமான வரவேற்பு இல்லாத சில திரைகளால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 85 திரையரங்குகளை மூடிய பிவிஆர் ஐநாக்ஸ், தற்போது அதிக தேவை உள்ள இடங்களில் கூடுதலாக 120 திரையரங்களை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், மும்பை, புனே, வதோதரா போன்ற நகரங்களில் முக்கியத்துவம் இல்லாத ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்ய உள்ளது.மேலும், அதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டப்படுமென நம்பிக்கை கொள்கிறது. தென்னிந்தியாவில் பிவிஆர் ஐநாக்ஸ் அதிகமான திரையரங்குகளை உருவாக்குவது மூலம் நிறுவனம் தனது வளர்ச்சியை உறுதி செய்யவுள்ளதாகவும், நிகரக் கடனில் இருந்து வெளிவரும் நோக்கில் செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் நிதியாண்டில் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ரூ.6,203.7 கோடி வருமானமும், ரூ.114.3 கோடி நஷ்டமும் சந்தித்தது.இந்நிலையில், டிக்கெட் விலையில் 10 சதவீதம் வளர்ச்சி, செலவில் 11 சதவீதம் உயர்வு உள்ளிட்ட மாற்றங்களை சந்தித்திருப்பதாகவும், நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் வியாபார வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.