Village Business Ideas In Tamil -தின்பண்டங்கள் விற்பனையில் இலட்சங்கள் சம்பாதிக்கும் கீழ ஈரால் கடைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய பஞ்சாயத்து தான் கீழ ஈரால் என்ற கிராமம், தூத்துக்குடி - மதுரை - சென்னை பைபாஸ்சின் உள்ளே அமைந்து இருக்கும் இந்த கிராமத்தில் வசிக்கும் இருவரின் கடைகள் தான், இந்த தங்க பாண்டியன் மிட்டாய் கடை மற்றும் ஸ்ரீனிவாசன் மிட்டாய் கடை. பொதுவாக தென் மாவட்டங்களில் கீழ ஈரால் சேவு என்றால் அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த இருவர்களின் கடை சேவு என்பது இந்த சுற்று வட்டாரங்களில் பேமஸ். பைபாஸ்சின் சாலையோரத்தில் கடை என்பதால் பல வெளிமாவட்டக்காரரகளும், ஏன் வெளி மாநிலத்து காரர்களும் கூட அந்த வழியாக சென்றால், இந்த இரு கடைகளின் முன் காரை நிறுத்தி தின் பண்டங்களை வாங்கி தான் செல்வார்கள்.
சரி, அப்படி என்ன தான் இருக்கிறது கீழ ஈரால் சேவுகளில்?
பொதுவாக ஸ்வீட் கடை சேவுகளில் இருந்து கீழ ஈரால் சேவுகள் சற்றே மாறுபட்டதாக இருக்கும். மொறு மொறுப்பிலும் சுவையிலும், தரத்திலும், தயாரிப்பிலும் சுத்தமானதாக இருக்கும். அதிலும் தினமும் அன்றே தயாரித்து அன்றே சுட சுட விற்பனை செய்கின்றனர். ஒட்டு மொத்தமாக சொல்ல வேண்டுமானால் சுவையும், சுவையோடு தரமும் தான் பல வாடிக்கையாளர்கள் இந்த கடைகளை நாடுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இங்கு சேவு மட்டும் கிடைப்பதில்லை, பல வகையான தின் பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய தின்பண்டங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக இங்கு கிடைக்கும். கருப்பட்டி மிட்டாய், சீனி மிட்டாய், கடலை மிட்டாய், சிப்ஸ் வகைகள், மிக்சர், நவதானிய மிக்சர், மிளகு சேவு, முறுக்கு, காரப்பூந்தி, சீவல் வகைகள் என இங்கு இல்லாத தின்பண்டங்கள் எதுவும் இல்லை. மிகப்பெரிய அளவில் தரமாக விற்பனைகள் செய்து வரும் இவர்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ஆனால் தமிழகத்தின் எல்லா பக்கமும் வாடிக்கையாளர்கள் உண்டு.
தூத்துக்குடி - மதுரை- சென்னை பைபாஸ்சில் கடைகள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் கார்கள் இந்த கடைகளில் நிற்காமல் செல்லவே செல்லாது, இந்த வழியாக மதுரை, திண்டுக்கல்,சென்னை செல்லும் பலரும் எதை வாங்குகிறார்களோ இல்லையோ, இந்த கடைகளில் நின்று தின்பண்டங்களை கார் முழுக்க நிரப்பி விட்டு தான் செல்வார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு சாதாரண சிறிய பஞ்சாயத்தில் இருக்கும் கடைகள், தின்பண்டங்கள் மூலம் தினசரி இலட்சங்கள் சம்பாதிக்க முடிகிறது என்றால் அதற்கு பின்னால் அவர்களின் அசாத்திய உழைப்பும், விட்டுக் கொடுக்காத தரமும் இருப்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
என்ன தான் மக்கள் நாகரீகம் என்ற பெயரில் பல பாரம்பரியங்களை விட்டுக் கொடுத்தாலும், சுவை என்ற விடயத்தில் மட்டும் அவர்கள் பாரம்பரியத்தை விட்டுக் கொடுப்பதே இல்லை, அவ்வாறாக பாரம்பரிய தின்பண்டங்களை சுட சுட சுவைக்க நினைத்தால் ஒரு முறை கீழ ஈரால் பக்கம் சென்று வாருங்கள், இரண்டே கடைகள் தான், அதில் எந்த கடையில் வாங்குவது என்று குழப்பம் எல்லாம் வேண்டால், இரண்டு கடைகளுமே சுவைகளின் உச்சம் தான்