தற்போது இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
HMPV:
தற்போது இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் HMPV பாதிப்பு உயர்ந்து உள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக சீனாவில் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
HMPV அறிகுறிகள்:
HMPV பொதுவாக சுவாச பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். முதலில் காய்ச்சல், இருமல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு போன்ற லேசான அறிகுறிகள் தோன்றும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு HMPV கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சில குழந்தைகளுக்கு அறிகுறிகள் மிகவும் கடுமையானதாகவும் இருக்கலாம். அவர்கள் வேகமாக சுவாசிக்க வாய்ப்புள்ளதுடன், சில நேரங்களில் உதடுகள் நீல நிறமாக மாறும் சூழல்களும் ஏற்படலாம்.
சோதனை செலவுகள்:
HMPV வைரஸுக்கு மெட்டாநியூமோவைரஸ் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்ய வேண்டும். இதற்கான சோதனை செலவு முக்கிய ஆய்வகங்களில் ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, HMPV, அடினோவைரஸ், கொரோனா வைரஸ் 229E மற்றும் HKU1 போன்ற பிற வைரஸ் தொற்றுகளுக்காக விரிவான சோதனை செய்ய வேண்டும் என்றால், மொத்த செலவு ரூ.20,000 வரை ஆகக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.