தற்போது இந்தியாவில் 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்கிறது. இப்படி இருக்கும் சூழலில், லண்டனில் நடந்த ஏலத்தில் இந்தியாவின் 100 ரூபாய் நோட்டு ரூ. 56 லட்சத்துக்கு ஏலம் போனது. அப்படி அந்த 100 ரூபாயில் என்ன சிறப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில், இந்திய 100 ரூபாய் நோட்டு ரூ. 56,49,650க்கு ஏலம் போனது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு காரணம் அந்த ஏலத்தில் போன நோட்டின் HA 078400 என்ற வரிசை எண் ஆகும்.
1950ம் ஆண்டில், வளைகுடா நாடுகளுக்கு ஹஜ் யாத்திரை செல்லும் இந்தியர்களுக்காக HA 078400 என்ற வரிசை எண்ணைக் கொண்ட நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதற்குக் காரணம், இந்திய நாணயத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கம் வாங்குவதைத் தடுப்பதற்காக இந்த விசேஷ குறியீடு கொண்ட நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
மேலும், இந்த நோட்டுகளில் HA என்கிற குறியீடு எளிதில் அடையாளம் காண முடியும். போலி நோட்டுகளை அடையாளம் காணவும் இந்நோட்டுகள் உதவியது. சில காரணங்களால், இந்த ஹஜ் நோட்டுகள் கடந்த 1970ம் ஆண்டிலேயே அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறின. இதனால் தற்போது பல லட்சம் ரூபாய்க்கு இந்த நோட்டு ஏலத்தில் போனது.