How To Exchange Torn Or Damaged Currency Notes - கிழிந்த நோட்டுகள், பழைய நோட்டுகள், இரண்டாக ஆன நோட்டுகள் என எந்த நோட்டுகளையும் வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும் எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Exchange Torn Or Damaged Currency Notes - ரூபாய் கிழிந்து விட்டதே, இரண்டாகி விட்டதே, எப்படியோ ஒரு கிழிந்த நோட்டு கட்டுகளுக்குள் வந்து விட்டதே என நீங்கள் இனி கவலைப்பட தேவையில்லை, ரிசர்வ் வங்கியின் விதிகள் படி நீங்கள் ஒரு கிழிந்த நோட்டை எந்த ஒரு பொதுத்துறை வங்கிகளிலும், எந்த ஒரு தனியார் வங்கிகளிலும் நாள் ஒன்றுக்கு 20 நோட்டுகள் வீதம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்பிற்கு மிகாமல் உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
உங்களுக்கு அந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியம் இல்லை, எந்தவொரு படிவமும் நீங்கள் நிரப்பவும் தேவை இல்லை, நேரடியாக பணம் செலுத்தும் பெறும் கவுண்டருக்கு சென்று கிழிந்த நோட்டுகளை கொடுத்து, அதே மதிப்போடு கிழியாத நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். வங்கிகள் மறுத்தால் உங்களால் வங்கிகள் மீது புகார் கூட கொடுக்க முடியும்.
சரி, கிழிந்த நோட்டுகளை மாற்ற விதிமுறைகள் ஏதும் உண்டா?
1) 20 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் மதிப்பு உள்ள கிழிந்த நோட்டுகளை நீங்கள் மாற்ற நினைக்கும் போது கிழிந்த நோட்டின் பரப்பு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் அந்த கிழிந்த நோட்டை முழுமதிப்போடு மாற்றிக் கொள்ள இயலும்.
2) அதே சமயத்தில் நோட்டுகளில் இருக்கும் சீரியல் நம்பர் ஒன்றில் ஆவது தெளிவாக தெரிய வேண்டும்.
3) 20 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் மதிப்பு உள்ள கிழிந்த நோட்டுகளின் பரப்பு, 50 சதவிகிதத்திற்கும் கீழ் இருக்கும் பட்சத்தில் நோட்டுகள் மாற்றப்பட இயலாது.
4) அதுவே 50 ரூபாய் மற்றும் அதற்கு மேல் மதிப்பு உள்ள கிழிந்த நோட்டுகள் என்னும் போது, குறைந்த பட்சம் 80 சதவிகிதத்திற்கும் மேல் கிழிந்த நோட்டின் பரப்பு இருந்தால், கிழிந்த நோட்டுக்கான முழுமதிப்பு வழங்கப்படும்.
5) 50 ரூபாய் மற்றும் அதற்கு மேல் மதிப்பு உள்ள கிழிந்த நோட்டுகளின் பரப்பு 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதத்திற்குள் இருக்கும் பட்சத்தில் கிழிந்த நோட்டின் மதிப்பிற்கு பாதி ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.
6) 50 ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள கிழிந்த நோட்டுகளின் பரப்பு 40 சதவிகிதத்திற்கும் கீழ் இருக்கும் பட்சத்தில் ரூபாய் மாற்றப்பட இயலாது.
7) அதுவே ATM களிலேயே ரூபாய் நோட்டு கிழிந்து வரும் பட்சத்தில் 100 சதவிகிதம் உங்களுடைய பணமதிப்பிற்கு அப்படியே கொடுக்கப்படும்.
8) இன்னொரு முக்கியமான விடயம் பேனாவினால், பென்சிலினால் எழுதப்பட்டு இருக்கிறது ரூபாய் நோட்டை மாற்ற முடியாது எனவும் வங்கிகள் கூற முடியாது, பேனாவினால் எழுதிய நோட்டையும் ரிசர்வ் வங்கியின் சட்டப்படி மாற்ற முடியும்.
சரி, வங்கிகள் உங்களது மாற்றத்தக்க கிழிந்த நோட்டுகளை மாற்ற மறுத்தால் என்ன செய்யலாம்?
வங்கிகள் உங்களது கிழிந்த நோட்டுகளை மாற்ற மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தளமான https://cms.rbi.org.in என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம், புகார்கள் மீதான நடவடிக்கை என்பது 15 முதல் 20 நாட்களுக்குள் எடுக்கப்படும்.
" இனிமேல் நீங்கள் கிழிந்த நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்குள் தயங்கி தயங்கி செல்ல வேண்டாம், தைரியமாக செல்லுங்கள், கிழிந்த நோட்டுகளை மாற்றிக் கொள்வது என்பது சட்டப்படி உங்களது உரிமை, உங்கள் உரிமையைக் கேட்க நீங்கள் தயங்கி நிற்க வேண்டிய அவசியம் என்பது இல்லை "