Cent Kalyani Scheme -இந்திய மத்திய வங்கி, பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூபாய் 10 இலட்சம் முதல் 100 இலட்சம் வரை கடனுதவி வழங்கும் சென்ட் கல்யாணி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
சென்ட் கல்யாணி திட்டம் என்பது என்ன?
இந்தியாவில் இருக்கும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டார்ட் அப் இந்தியா அமைப்பின் கீழ் துவங்கப்பட்ட ஒரு திட்டம் தான் இது. இத்திட்டம் புதியதாக தொழில் துவங்க நினைக்கும், பெண் தொழில் முனைவோர்களுக்கும், ஏற்கனவே அவர்கள் துவங்கிய தொழிலை விரிவுபடுத்துவதற்கும் கடனுதவி வழங்கும்.
யார் யாருக்கு இந்த கடன் உதவி கிட்டும்?
பெண்களால் முன்னெடுக்கப்படுகின்ற கைத்தறி, அழகியல் துறை, ஜெராக்ஸ் கடைகள், உணவு சம்மந்தப்பட்ட தொழிகள், தையலகம் மற்றும் MSME 2006 Act -யின் கீழ் வருகின்ற அனைத்து சிறு குறு தொழில்களுக்கும் இந்த கடனுதவி வழங்கப்படும். கல்வி சார்ந்த நிறுவனங்களுக்கு இக்கடன் வழங்கப்பட மாட்டாது.
எப்படி சென்ட் கல்யாணி திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவது?
1) முதலில் நேரடியாக இந்திய மத்திய வங்கியின் கிளைகளுக்கு சென்று உங்களுடைய ஐடியாக்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
2) ஆவணங்கள் என்பவை வணிக சான்று, வருமான சான்று, ஆதார், பான் கார்டுகள் அவ்வளவு தான்.
3) உங்களுடைய ஆவணங்கள் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருப்பின் கடனுதவிக்கான விண்ணப்பம் வழங்கப்படும்.
4) அதனை நிரப்பி சரியான ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் பட்சத்தில் உங்களது விண்ணப்பத்தை வங்கி நேரடி விசாரணைக்கு உட்படுத்தி, கடனுதவி உடனடியாக வழங்கப்படும்.
முழுக்க முழுக்க பெண் தொழில் முனைவோர்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் இந்த திட்டம் தேசத்தில் பல பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கி இருக்கிறது. இன்னமும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை