Authoor Mani Hotel Success Story -தமிழகத்தின் தென் பகுதி மக்களால் தூக்கி நிறுத்தப்பட்ட ஸ்தாபனமான ஆத்தூர் மணி ஹோட்டலின் வரலாறு பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சாதாரண சிறிய கிராமம், முழுக்க முழுக்க விவசாயங்களை நம்பி இருக்கும் மக்கள். பெரிய அளவில் சந்தைகள் எல்லாம் இல்லை. அங்கு வசித்த மணி என்பவர் பிழைப்பிற்காக 1962 காலக்கட்டத்தில் ஒரு டீ கடை ஒன்றை ஆரம்பிக்கிறார். சிறியதொரு ஸ்தாபனம் தான் ஆனாலும் எளிய மக்களை சென்றடையும் வகையில் விலையிலும் தரத்திலும் அப்போதே மேன்மை.
பின்னர் டீ கடை சற்றே விரிவடைந்து ஹோட்டல் ஆகிறது. அனைத்து சாப்பாடு வகைகளும் கம்மியான விலைக்கு விற்கப்படுகிறது. தரமான சாப்பாடுகள் எளிய விலை என்றதும் எளிய மக்களின் கூட்டம் அலைமோதியது. அந்த காலக்கட்டத்தில் சைவ ஹோட்டல் என்றால் சரவணபவன் தான் என்பதை முறியடித்து ஆத்தூர் மணி ஹோட்டல் தெற்கில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது.
பின்னர் கிளைகளை விரிவு படுத்தியது. ஏரல், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை என்று எல்லா பக்கமும் தன் சுவையையும் தரத்தையும் ஆத்தூர் மணி குரூப்ஸ் கொண்டு சென்றது. பொதுவாக எந்தவொரு பிசினஸ் என்றாலும் அதில் உழைப்பும் நேர்மையும் இருந்தால் மக்களிடம் எளிதாக சென்றடையும். நிச்சயம் அதற்கு எடுத்துக்காட்டாக ஆத்தூர் மணி அவர்களை சொல்லலாம். அவருடைய உழைப்பும் உன்னதமும் மட்டுமே அவரையும் அவரின் ஸ்தாபனத்தையும் இந்த நிலைக்கு எடுத்து சென்று இருக்கிறது.
எல்லா நிலைகளிலும் அவருக்கு பக்க பலமாக இருந்த அவரது மனைவி மாரியம்மாள் அவர்களின் பெயரில் ஆத்தூர் மாரீஸ் மசாலா என்றதொரு நிறுவனத்தையும், மணி அவர்கள் நிறுவி இருக்கிறார். அதுவும் தற்போது தமிழகத்தின் தென் பகுதிகளில் பிரபலமாகி வருகிறது. உண்மையும், உழைப்பும், நேர்மையும் இருந்தால் எந்த நிலையில் இருந்தும் கூட எட்டாத நிலைக்கு செல்ல முடியும் என்பதற்கு ஆத்தூர் மணி அவர்கள் ஆகச்சிறந்த உதாரணம்.
இன்றைய ஆத்தூர் மணி ஹோட்டல் விலையிலும் தரத்திலும் பெரிதாய் மாற்றம் கண்டு இருக்கலாம், ஆனால் அன்று ஒரு பத்து ரூபாய் இருந்தால் டீ வடை சாப்பிட்டு விடலாம், ஒரு 20 ரூபாய் இருந்தால் சாப்பாடே சாப்பிட்டு விடலாம் என்று எளிய மக்களின் சரவணபவனாக ஆத்தூர் மணி விளங்கியது என்று கூறினால் மிகையாகாது