தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை மூலம் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் "கலைஞர் கைவினை திட்டம் (KKT)" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக மாற்ற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், கைவினை கலைஞர்கள் அதிகபட்சமாக ரூ. 3,00,000 வரை வங்கி கடன் பெறலாம், அதற்காக 25% மானியமும் 5% வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்கவோ, ஏற்கனவே செய்யும் தொழிலை விரிவாக்கவோ இந்த நிதி உதவியாக அமையும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு கைவினைத் தொழில்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. அதில் கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய ஜவுளி அச்சிடுதல், தோல் மற்றும் காலணி தயாரித்தல், மீன் வலை தயாரித்தல் என 25 தொழில்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது.இந்தத் திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்தி, தொழில் வளர்ச்சி பெற உதவியாக இருக்கும்.