Stock Market Facing Significant Declines - மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன, அதற்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தொடர்ந்து சில நாட்களாகவே மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இறக்கத்தை சந்தித்து வருகின்றன, இதனால் முதலீட்டாளர்கள் தினம் தினம் இலட்சம் கோடிகளை பங்குச்சந்தைகளில் இழந்து வருகின்றனர், ஒரு நாள் இரு நாள் சரிவை சந்தித்து விட்டு மீண்டும் ஏற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மந்த போக்கிலேயே சென்று கொண்டு இருக்கின்றன.
தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவையும் மந்த நிலையையும் சந்தித்து வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறுவது முக்கிய காரணங்களில் ஒன்றாகும், குறிப்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால், முதலீட்டாளர்கள் அமெரிக்க சந்தைகளை நோக்கி திரும்புகின்றனர்.
மேலும், சர்வதேச அளவில் சீன சந்தைகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்துவிட்டு சீன பங்குகளை தொடர்ந்து வாங்குகிறார்கள், இது போக பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள், மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவைகளும் பங்குச் சந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைகின்றன.
இந்தியாவில் விதிக்கப்படும் மூலதன ஆதாய வரியும் முதலீட்டாளர்கள் வெளியேற ஒரு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர், இது போக உலகளாவிய சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இந்திய பங்குச் சந்தைகளையும் அதன் சமநிலையையும் பெரிதாக பாதிக்கின்றன.