Export Business in Tamilnadu -பொதுவாக ஏற்றுமதி ஒரு நாட்டிலோ, மாநிலத்திலோ நடக்கிறது என்றால் அந்த நாடு தனக்கான தேவையில் தன்னிறைவு பெற்று விட்டு, தன் நாட்டுக்கு போக மிச்சம் இருப்பதை ஏற்றுமதி செய்கிறது என அர்த்தப்படும். அந்த வகையில் உலகளாவிய அளவில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் தமிழகமும் ஒரு தன்னிறைவு மாநிலம் ஆக அறியப்படுகிறது.
சரி, தேசத்தின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு என்ன?
பொதுவாக ஏற்றுமதி அதிகமாக இருக்கும் ஒரு மாநிலம் வளர்ந்த, வளரும் மாநிலமாக கருத்தில் கொள்ளப்படும், அந்த வகையில் தமிழகம் உலகளாவிய அளவில் ஏற்றுமதியில் புகழ் பெற்று வருகிறது, இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில், தமிழகத்தின் ஏற்றுமதி பங்கு 9.25 சதவிகிதம் ஆகும். குஜராத் 33 சதவிகித ஏற்றுமதி பங்குடன் முதல் இடத்திலும், மஹாராஷ்டிரா 16.60 சதவிகித ஏற்றுமதி பங்குடன் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.
தமிழகத்தினுள் எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில், காஞ்சிபுரம் 39.94 சதவிகித ஏற்றுமதி பங்குடன் முதலிடத்திலும், சென்னை, 15.45 சதவிகித ஏற்றுமதி பங்குடன் இரண்டாவது இடத்திலும், கோவை, 7.58 சதவிகித ஏற்றுமதி பங்குடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. பொதுவாக தமிழகம் டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், ஹார்டுவேர் பார்ட்கள், எலக்ட்ரானிக் ஹார்டுவேர்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் முன்னிலை வகிக்கிறது.தமிழகத்தின் ஏற்றுமதி மதிப்பு மட்டும் 30.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது.
கோவில் நகரமாக அறியப்படும் காஞ்சிபுரம் அப்படி என்ன ஏற்றுமதி செய்கிறது?
காஞ்சிபுரம் தான் தமிழகத்தில் அதிகளாவிய ஏற்றுமதிகளை கையாண்டு வருகிறது, அப்படி என்ன என்ன ஏற்றுமதி செய்கிறது என்றால், மென்பொருள் தயாரிப்புகள், பட்டு சேலைகள், ரெடிமேட் ஆடைகள், லெதர் தயாரிப்புகள், கண்ணாடிகள், கிரானைட்கள், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள், கார்கள், ஆட்டோ ஹார்டுவேர்கள் என பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆதலால் காஞ்சிபுரம் கோவில்களின் நகரம் மட்டும் அல்ல, ஏற்றுமதி நகரமும் தான்.