LayOffs In January 2025 - ஜனவரியில் மட்டும் உலகளாவிய அளவில், நிறுவனங்கள் கிட்டத்தட்ட 50,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
வேலை நீக்கங்கள் என்பது எல்லாம் தற்போது உலகளாவிய நிறுவனங்களில் சர்வ சாதாரணமாக மாறி விட்டது, இலாபம் குறைந்து விட்டால் வேலை நீக்கம், இலாபத்தை அதிகப்படுத்த வேலை நீக்கம், நிறுவனத்தை நிலை நிறுத்த வேலை நீக்கம், செயற்கை நுண்ணறிவு வந்து விட்டதால் வேலை நீக்கம் என நிறுவனங்கள் வேலை நீக்கத்திற்கு என பல காரணங்கள் வைத்து இருக்கின்றன.
கொரோனோவிற்கு முந்தைய காலக்கட்டம் வேலை நீக்கங்கள் இருந்ததா என்றால் இருந்தது தான், ஆனால் ப்ரேக்கிங் நியூஸ்சில் இடம் பெறாத அளவிற்கு இருந்தது, ஆனால் தற்போது மாதம் மாதம் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து ப்ரேக்கிங் நியூஸ் ஆக வேலை நீக்கங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன, பிங்க் நோட்டீஸ் என்பது ஊழியர்களுக்கு தினசரி சர்குலர் போல மாறி விட்டது.
அந்த வகையில் கடந்த ஜனவரியில் மட்டும் உலகளாவிய அளவில் கிட்டத்தட்ட 49,795 வேலை நீக்கங்கள் அரங்கேறி இருக்கிறதாம், இது கடந்த டிசம்பரை விட (38,792 வேலை நீக்கங்கள்) 28 சதவிகிதம் அதிகம் என கூறப்படுகிறது, ஆனாலும் கடந்த ஜனவரி 2024 ஆம் ஆண்டை விட (82,307 வேலை நீக்கங்கள்) 40 சதவிகிதம் குறைவு என தான் கூறப்படுகிறது.
இந்த வேலை நீக்கங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் டெக் சாம்ராஜ்யங்களிலேயே நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது, இதற்கு முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு காரணம் என சொல்லப்படுகிறது, உலகளாவிய அளவில் இந்த வருடம் மட்டும் 9% ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பார்கள் என்ற அதிர்ச்சிகர தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.