Air India Launches WiFi On Domestic Flights - கிட்டதட்ட 10 வருடமாக இந்தியாவில் இயங்கி வந்த விஸ்தாரா நிறுவனம் சமீபத்தில் டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது, இந்த இணைவின் மூலம் இனி ஏர் இந்தியா ஒரு வாரத்திற்கு 210 விமானங்கள், 90 வழித்தடங்களை இணைக்கும் வகையில் 5,600 பயணங்களை நிகழ்த்தும் இந்தியாவின் ஒரு மிகப்பெரிய ஏர்கேரியராக உருவெடுத்தது.
இந்த இணைவிற்கு பிறகு ஏர் இந்தியா பயணிகளுக்கு தொடர்ந்து தங்களது விமானங்களிலும் அதன் சேவைகளிலும் பல்வேறு அப்டேட்களை கொடுத்து வந்தது, முதற்கட்டமாக பயணிகளுக்கான சேவைகளின் தரம் முக்கிய கருப்பொருளாக கொள்ளப்பட்டது, பின்னர் துரித சேவை, நீண்ட நெடிய காலத்திற்கு பயணத்தை இலகுவாக்கும் வகையில் பயண டிக்கெட்டின் விலையில் மாற்றம் செய்தும் இருந்தது.
தற்போது தங்களது உள்நாட்டு விமான சேவைகளில் பயணிகளுக்கு இலவச அருகலை (WiFi) வழங்கவும் ஏர் இந்தியா முடிவெடுத்து இருக்கிறது, முதற்கட்டமாக அனைத்து உள்நாட்டு விஸ்தாரா விமானங்களிலும் இந்த அருகலை (WiFi) அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது, இதன் மூலம் விமானம் 36,000 அடியில் பறந்து கொண்டு இருக்கும் போது கூட பயணிகள் விமானத்திற்குள் இணைய சேவையை பெற முடியும்.
இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவைகளில் முதன் முதல் அருகலையை (WiFi) அறிமுகப்படுத்தும் நிறுவனமாக ஏர் இந்தியா உருவெடுத்து இருக்கிறது, தொடர்ந்து அடுத்தடுத்து ஏர் இந்தியாவை பயன்படுத்தும் பயணிகளுக்கு, சர்வதேச தரத்தில் விமான சேவை வழங்குவது உறுதி செய்யப்படும் என ஏர் இந்தியா உறுதியளித்து இருக்கிறது.