World's Most Powerful Passports - இலண்டனை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் உலகின் வலிமையான பாஸ்போர்ட் குறித்த குறியீடுகளை ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு என்ற பெயரில் வருடாந்திரமாக வெளியிட்டு வருகிறது, ஒட்டு மொத்தமாக 199 நாடுகளின் பாஸ்போர்ட் குறித்த தரவுகள் மற்றும் ரேங்கிங் பட்டியலை இந்த ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்த தரவுகள் மேம்போக்காக இல்லாமல் அதிகாரப்பூர்வமாக சர்வதேச ஏர் டிரான்ஸ்போர்ட் அஸ்சோசியேசனிடம் இருந்து தரவுகள் வாங்கி வெளியிடப்படுகிறது, இந்த குறியீடானது ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டின் வலிமையை குறிக்கும், அதாவது ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை மட்டும் வைத்துக் கொண்டு விசா இல்லாமல் எத்துனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பது தான் பாஸ்போர்ட்டின் வலிமை.
அத்தகைய தரவுகளை தான் இந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு வருடாந்திரமாக வெளியிட்டு வருகிறது, தற்போது 2025 யில் வெளியிட்டு இருக்கும் அந்த தரவுகளில் சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது, சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை கொண்டு ஒருவர் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும், இரண்டாவது இடத்தில் ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் இடம் பிடித்து இருக்கிறது.
ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும், மூன்றாவது இடத்தை பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பகிர்ந்து இருக்கின்றன, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும், இந்திய பாஸ்போர்ட் இப்பட்டியலில் 85 ஆவது இடத்தில் இருக்கிறது.
" கடந்த வருடம் இப்பட்டியலில் 80 ஆவது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் தற்போது 5 இடங்கள் சரிந்து 85 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது, இந்திய பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு ஒருவர் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் "