• India
```

ஜெலன்ஸ்கி பேச்சு வார்த்தைக்கு உடன்படாத நிலையில்...உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா...!

Ukraine Aid Paused

By Ramesh

Published on:  2025-03-04 08:53:14  |    62

US Suspend Military Assistance to Ukraine - உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தி இருக்கிறது அமெரிக்கா.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஆனது கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது, நட்பு நாடு என்ற பெயரில் உக்ரைனுக்கு ஆதரவாக களத்தில் நின்ற அமெரிக்கா, போரில் உக்ரைனுக்கு பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வந்தது, இதுவரை அமெரிக்கா உக்ரைனுக்காக செலவிடப்பட்ட ஆயுத நிதி மட்டும் 350 பில்லியன் டாலர்களை தாண்டும் என கூறப்படுகிறது.

சரி உண்மையில் அமெரிக்கா நட்பு நாடு என்பதற்காக தான் உக்ரைனுக்கு உதவி செய்ததா என்றால் அதில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன, ஒரு பக்கம் ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்காக ரஷ்யாவிடம் பேச தயார் என கூறினாலும், உக்ரைனிடம் கனிமவள டீலில் கையெழுத்து போட்டால் தான் இனி உங்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்க முடியும் எனவும் கூறுகிறார்.



அமெரிக்காவை பொறுத்தமட்டில் உக்ரைனில் இருக்கும் கனிமவளங்கள் மீது அதி தீவிரம் காட்டுகிறது, சமீபத்தில் வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரம்ப் இடைடே நடந்த வாக்குவாதத்திற்கு இந்த கனிமவள ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி கையெழுத்திட மறுத்ததும் ஒரு காரணம் தான், எப்படியும் நம்மிடம் தான் வந்தாகவே வேண்டும் என்ற ஒரு எண்ணம் அமெரிக்காவிடம் நிச்சயம் இருக்கிறது.

அதனால் தற்போது உக்ரைனுக்கான அனைத்து விதமான ஆயுத உதவிகளையும் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்து ஜெலன்ஸ்கிக்கு மற்றுமொரு அழுத்தத்தை கொடுத்து இருக்கிறது, அமைதி வேண்டும் என நினைப்பவர்கள் கனிமவளங்களுக்கு ஏன் ஆசைப்பட வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் கேள்விகளுக்கு அமெரிக்காவின் வல்லமை மற்றும் ஆணவம் பதிலளித்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.