சைஃப் அலி கானின் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் அரசு கட்டுப்பாட்டில் வரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் சைஃப் அலி கான். தற்போது இவரின் குடும்பத்தினரின் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் அரசு கட்டுப்பாட்டில் வரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது
மத்திய பிரதேசத்தின் போபால் மாகாணத்தின் கடைசி மன்னராக நவாப் ஹமிதுல்லா கான் 1947 வரை இருந்தார். அவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகள் அபிதா சுல்தான் 1950ல் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றார், ஆனால் இரண்டாவது மகள் சஜிதா சுல்தான் இந்தியாவிலேயே தங்கி, நவாப் இப்திகார் அலி கான் பட்டவுடியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் பேரன் பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான்.
ஹமிதுல்லா கான் குடும்பத்துக்கு மத்திய பிரதேசத்தில் பல்வேறு சொத்துகள் இருந்தன, இவை தற்போது ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புடையவை எனக் கருதப்படுகிறது. 1968ல் "எதிரி சொத்து சட்டம்" அமல்படுத்தப்பட்டது, இது பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், 2014ல் மத்திய அரசு இந்த சொத்துகள் தங்களுக்கு சொந்தமானவை என அறிவித்தது.
2015ல் சைஃப் அலி கான், அவரது தாய் ஷர்மிளா தாகூர் மற்றும் சகோதரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அகமதாபாத் அரண்மனை, நூர்-உஸ்-சபா அரண்மனை உள்ளிட்ட பல சொத்துகள் தங்களுக்குச் சொந்தமானவை என தெரிவித்தனர். இதையடுத்து அந்த சொத்துகளை மத்திய அரசு கைப்பற்ற தற்காலிக தடையை நீதிமன்றம் விதித்தது.
2016ல் மத்திய அரசு "எதிரி சொத்துகளில் வாரிசுகளுக்கு உரிமை இல்லை" என அவசர சட்டம் கொண்டு வந்தது.
2023 டிசம்பர் 13 அன்று, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் அகர்வால், 2015ல் விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்கினார். மேலும், 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என சைஃப் அலி கான் குடும்பத்தினருக்கு வாய்ப்பு வழங்கினார்.
ஆனால், இன்று வரை சைஃப் அலி கான் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால், 15,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.