Coco Husk In To 70 Crore Empire - தென்னை மரம் மற்றும் தேங்காய் வேஸ்ட்களின் மூலம் பல தரப்பட்ட பொருட்கள் தயாரித்து அதை உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வரும் சென்னை இளைஞர் அனீஷ் அகமது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அனீஷ் அகமது, சென்னையை சேர்ந்த உயிரி தொழில்நுட்பவியல் பட்டதாரி, அவரது தந்தை தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார், அவரது அப்பாவோடு அவ்வப்போது அனீஷ் அகமது அந்த தொழிற்சாலைக்கு சென்று வருவதால் அவருக்கு அந்த கயிறு எப்படி செய்கிறார்கள் என்ற ஆர்வம் சிறு வயதில் இருந்தே முளைத்தது.
பின்னர் படித்து முடித்ததும் கூட தேங்காயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் கூடுகள், நார்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வந்தார், தேங்காய் மட்டையில் இருந்து தேங்காய் நார் பிரித்து எடுக்கப்படும் போது, கூடவே பித் எனப்படும் கோகோ கரியும் கிடைப்பதை அவர் உணர்ந்தார், பெரும்பாலும் நார் எடுக்கும் தொழிலில் அது கழிவாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அதையும் கிரீன்ஹவுஸ், நர்சரிகள், உட்புற தோட்டக்கலை போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்த முடியும் என்பதை அனீஷ் அகமது உணர்ந்தார், 2012 ஆம் ஆண்டு சென்னையில் Global Green Coir என்ற பெயரில் ஸ்டார்ட் அப்பை தோற்றுவிக்கிறார், கோகோ கரி மூலம் பானைகள், கலை பொருட்கள், பைகள் என வித்தியாசம் வித்தியாசமாக தயாரித்து சந்தைப்படுத்தினார்.
எளிதில் மட்க கூடிய பொருட்கள் என்பதால் இவரால் எளிதாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிந்தது, விவசாயத்தில் நீரை நிலைத்து இருக்க செய்யவும், செடிக்கு காற்றோட்டம் கொடுக்கவும், மண்ணின் PH தன்மையை பாதுகாப்பதிலும் இந்த கோகோ கரி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக உணர்ந்த அனீஷ் விவசாய துறைகளிலும் தங்களது பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறார்.
" உலகளாவிய அளவில் 4 பில்லியன் டாலருக்கும் நிகரான மதிப்பில் சந்தை மதிப்பை கொண்டு இருக்கும் இந்த கோகோ கரி பொருட்கள் மூலம் அனீஷ் அகமது வருடத்திற்கு 75 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார் "