கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடிமக்கள் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் கல்வி விசா பெற்ற சுமார் 50,000 மாணவர்கள் கனடாவின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரவில்லை. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது, இது கல்வி விசா பெற்றவர்களில் 5.4% இந்தியர்கள் என்பதைக் குறிக்கிறது.
கனடாவில் கல்விக்காக 144 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸில் இருந்து 688 பேர் (2.2%) மற்றும் சீனாவில் இருந்து 4,279 பேர் (6.9%) கல்வி நிறுவனங்களில் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கனடா-அமெரிக்க எல்லையில் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளில் இந்தியா மற்றும் கனடாவின் சில கல்வி நிறுவனங்களுக்குள் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவின் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், சில இந்திய மாணவர்கள் கல்வி விசா பெற்று கனடா சென்ற பின்னர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.