PPF Scheme In Tamil -இன்றைய சூழலில் பணம் சம்பாதிப்பது மட்டும் போதாது, சேமிப்பும் அவசியம். ஆனால் எங்கே முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். நீண்டகால முதலீடுகள் விரும்புபவர்களுக்கு, அரசின் ஆதரவுடன் செயல்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), திட்டம் சிறந்தது. இந்த திட்டம் வரிசேமிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை கொண்டுள்ளது.PPF திட்டம்,ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்குகிறது. மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் பங்குகள் போன்ற சந்தை சார்ந்த முதலீடுகள் அதிக லாபம் தரினாலும், அவற்றில் ஆபத்து அதிகம். ஆனால் PPF திட்டம் ஆபத்தின்றி நன்மை தருகிறது.
இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்தும் முதலீட்டின் வட்டி, அசல் தொகை, மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரிகள் கிடையாது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் PPF கணக்கில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகளின் **lock-in period** காலம் கொண்ட இது சிறந்த சேமிப்பு திட்டமாகும்.
மாதாந்திர முதலீடுகளை எடுத்துக்காட்டுகள் உடன் பார்க்கலாம்,
மாதம் ரூ.3,000 முதலீடுசெய்தால், 15 ஆண்டுகளில் உங்களது முதலீட்டு தொகை ரூ.5,40,000 ஆகும். 7.1% வட்டியில் மொத்த வட்டி ரூ.4,36,370 ஆகும். அதன்படி, முதிர்வு நேரத்தில் ரூ.9,76,370 கிடைக்கும்.
மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்களது முதலீட்டு தொகை ரூ.9,00,000 ஆகும். 7.1% வட்டியில் மொத்த வட்டி ரூ.7,27,284 ஆகும். இதன் அடிப்படையில், முதிர்வு நேரத்தில் ரூ.16,27,284 பெறலாம்.
7 ஆம் ஆண்டுக்கு பிறகு பகுதியளவு தொகையை எடுத்துக்கொள்ளலாம். மேலும், 3 வருட காலம் முடிந்த பிறகு நிலுவைத் தொகையில் கடன் பெறும் வசதியும் உள்ளது.