• India

தனது நிகர சொத்தை விட...மூன்று மடங்கு நன்கொடை...அது தான் ரத்தன் டாடா...!

Ratan Tata Donation Worth | Ratan TATA Donated Net Worth​

By Ramesh

Published on:  2024-10-11 03:36:19  |    2759

Ratan Tata Donation Worth -டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி அவரது மகன் ரத்தன்ஜி டாடாவால் தத்து எடுக்கப்பட்டவர் தான், நேவல் டாடா, இந்த நேவல் டாடாவின் மூத்த மகன் தான் ரத்தன் டாடா, ரத்தன் டாடாவிற்கு 7 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டனர், அதற்கு பின்னர் வளர்ந்தது எல்லாம் பாட்டி வீட்டில் தான். சிறு வயதிலேயே படிப்பில் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆர்வம் மிக்கவராக விளங்கி இருக்கிறார் ரத்தன் டாடா.

மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த ரத்தன் டாடா, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் கோர்னெல் பழ்கலைகழகத்தில் இளங்கலை கட்டமைப்பு பொறியியலை முடித்தார், ஹார்வர்டு பல்கலை கழகத்தில் மேல் நிலை வணிகப் படிப்பையும் முடித்தார். படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே இவருக்கு பல நிறுவனங்களின் ஆபர்கள் வந்தது, ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், என்ன செய்தாலும் இந்தியாவில் தான் செய்வேன் என்ற நோக்கத்தோடு இந்தியா வந்து இறங்கினார்.


அதற்கு பின் டாடா நிறுவனத்தின் ஒரு சில பொறுப்புகளில் பணி புரிந்த ரத்தன் டாடா, எப்போதும் அடிமட்ட தொழிலாளர்களோடு இணைந்து பணி புரிவதை தான்  விரும்புவாராம், பெரும்பாலும் தலைமைகளை விரும்பாதவர் தான், ஆனால் ரத்தன் ஜி டாடாவின் மறைவிற்கு பின்னர், ரத்தன் டாடாவிற்கு டாடாகுழுமத்தின் தலைமையை ஏற்கும் நிலை வந்தது. அது என்னவோ டாடா தலைமை ஏற்றதுமே டாடா நிறுவனத்தின் அனைத்து துறையும் அதீத வளர்ச்சியை நோக்கி சென்றது. சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய நிறுவனமாக டாடா இருக்கிறது என்றால், அதில் ரத்தன் டாடாவின் பங்கு அளப்பரியது.

கொடை வள்ளல் ரத்தன் டாடா

பொதுவாகவே அனைவரும் தனக்கும், தொழிலுக்கும், வசதிக்கும், அசதிக்கும் போக தான் கொடை என்பார்கள், ஆனால் ரத்தன் டாடா அப்படி இல்லை, கொடைக்கு போக தான் தனக்கும், தொழிலுக்கும்,வசதிக்கும், அசதிக்கும் என்றதொரு கொள்கையை கொண்டவர், 2008 ஆம் ஆண்டு, தான் படித்த கோர்னெல் பல்கலைகழகத்திற்கு 50 மில்லியன் டாலர்களை அள்ளி வழங்கினார், அன்றைய காலக்கட்டத்தில் ஒரு பல்கலைக்கழகம் பெறும் மிகப்பெரிய நன்கொடை அது தான்.


அவர் அமெரிக்க பல்கலைக் கழகத்திற்கு மட்டும் கொடை அளிக்கவில்லை, இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனமாக அறியப்படும் ஐஐடி பாம்பே பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு 950 மில்லியன் ரூபாயை கொடையாக வழங்கினார், ஐஐடி தன் வாழ்நாளில் பெற்ற மிகப்பெரிய நன்கொடை என்பது அது தான், அமெரிக்காவில் இருக்கும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் இருந்து படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு டாடா நிறுவனத்தின் மூலம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாணவர்களும் கல்வித்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று, அங்கு படிப்பவர்களின் பெரும்பாலான ஏழ்மை மாணவர்களின் படிப்பிற்கான தொகையை ரத்தன் டாடா ஏற்றுக் கொண்டார், இந்தியாவில் நிலவும் பல்வேறு கொடிய நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்காக மருத்துவ துறைக்கும் ரத்தன் டாடா மில்லியன்களின் கொடை அளித்து இருக்கிறார். கிராமங்களின் மறுமலர்ச்சி, ஏழை எளியோர்களின் அத்தியாவசியம், மருத்துவம், கல்வி, அரசின் ஒரு சில திட்டங்கள் என ரத்தன் டாடா கொடை அளிக்காத துறையே இல்லை.


ரத்தன் டாடாவின் நிகர சொத்து மற்றும் கொடை மதிப்பு

2024 நிலவரத்தின் படி ரத்தன் டாடாவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 3,800 கோடி என அறியப்படுகிறது, ரத்தன் டாடா செய்த நன்கொடையின் மதிப்பு மட்டும் 8,683 கோடி, அவர் செய்த நன்கொடை என்பது, அவரின் நிகர சொத்து மதிப்பை விட கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகம், அவர் செய்த நன்கொடையையும் அவருடைய நிகர சொத்து மதிப்பில் சேர்க்கும் பட்சத்தில் ரத்தன் டாடாவின் சொத்தின் மதிப்பு 12,483 கோடி, அதாவது அவரது சம்பாத்தியத்தில் கிட்ட தட்ட 70 சதவிகிதத்தை நன்கொடையாக அளித்து, நிகழ்கால கொடை வள்ளல் ஆகவே வாழ்ந்து இருக்கிறார் ரத்தன் டாடா.

 இந்த யுகம் எழுத்துக்களிலும் படத்தின் காட்சிகளிலும் மட்டுமே பார்த்த கொடை வள்ளல் கர்ணனின் சாட்சியாகவே ரத்தன் டாடா வாழ்ந்து இருக்கிறார் என்று கூறினால் மிகையாகாது "