ஆன்லைன் வர்த்தகத்தில் மட்டும் ஒரு ஆண்டில் ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியதாக கூறப்படும் ஒரு பானிபூரி கடைக்காரருக்கு, மத்திய அரசு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் மாறி இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 17, 2024 அன்று வழங்கப்பட்ட அந்த நோட்டீசில், "தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் பிரிவு 70-ன் கீழ், நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருக்கிறது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.40 லட்சத்தை மிஞ்சும் வர்த்தகங்கள் ஜி.எஸ்.டி பதிவு செய்யும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் 2023-24 ஆம் ஆண்டில் ரேசர் பே மற்றும் ஃபோன் பே போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் மூலம் இந்த வருவாய் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இருப்பினும் தற்போது அந்த நோட்டீசின் உண்மைத்தன்மை பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல், சம்பந்தப்பட்ட பானிபூரி வியாபாரர் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் தனது கடையை நடத்துகிறார் என்பதற்கும் தெளிவான விவரங்கள் இல்லை.