• India
```

திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா வரலாறு தெரியுமா?

Iruttukadai Tirunelveli Halwa |  Tirunelveli Halwa

By Dharani S

Published on:  2024-09-26 12:42:42  |    219

Iruttukadai Tirunelveli Halwa -ஹல்வா என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது திருநெல்வேலி தான், அந்த ஹல்வாவை திருநெல்வேலியின் அடையாளமாக மாற்றிய இருட்டுக்கடையின் வரலாறு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இருட்டுக்கடை முதலில் எப்படி உருவானது?
1900 காலக்கட்டம், ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ண சிங் என்பவர் பிழைப்பிற்காக நெல்லை டவுணில் ஒரு சிறிய ஹல்வா கடை வைக்கிறார். தினமும் சாயங்காலம் கடையை திறப்பார். ஒரு சின்ன சிம்னி விளக்கை வெளிச்சத்திற்காக ஏற்றி வைத்து விட்டு, இலைகளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்வார். ஒரு சிறிய பாத்திரத்தில் சுட சுட ஹல்வா ஒரு பக்கம் இருக்கும். நெல்லை டவுண் பல தொழிலாளர்கள் கூடும் ஒரு பகுதி என்பதால், இந்தக் கடை அவர்களின் கண்களில் எளிதாக தென்பட்டு விடும். அந்த வழியாக செல்லும் அத்துனை பேரும் சரி ’கொஞ்சம் ஹல்வா சாப்பிட்டு விட்டு செல்வோமே’, என கையில் இருக்கும் காசை கொடுத்து விட்டு, இலையில் சூடான ஹல்வாவை வாங்கி கடையின் ஓரத்தில் நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு செல்வர். சூடான அந்த ஹல்வா இலையின் வாசத்தை மெல்ல எடுத்துக் கொண்டு ஒரு அமிர்தத்தின் சுவையை தரும் என்றே சொல்லலாம்.
சரி, இருட்டுக்கடை என்ற பெயர் ஏன்?
முதலில் அந்த கடைக்கு பெயர் என்பது கிருஷ்ண சிங் ஸ்வீட் ஸ்டால் என்பது தான், மக்கள் அதற்கு வைத்த பெயர் தான் இருட்டுக் கடை, காரணம் அந்த காலக்கட்டத்திலேயே டவுண் மின் விளக்குகளால் ஜொலிக்கும், ஆனால் இந்த ஒரு கடை மட்டும் சிறு விளக்கில் எங்கோ தூரத்தில் இருக்கும் நட்சத்திரம் போல ஒளிர்ந்து கொண்டு இருக்கும். இருட்டான இடத்தில் சிறு விளக்குடன் செயல்பட்டு வந்ததால் மக்கள் இதனை இருட்டுக்கடை, இருட்டுக்கடை என்றே கூற ஆரம்பித்து விட்டனர்.


சரி, எப்படி இவ்வளவு பிரபலம்?
நெல்லை டவுணின் மையத்தில் இருக்கும் கடை, பொதுவாக மக்கள் அதிகமாக கூடும் இடம் இது. அந்த காலத்தில் விளம்பரங்கள் என்பது தரம் தான். நாம் ஒரு பொருளை தரமாக கொடுக்கும் போது, அது மக்களின் புகழ்ச்சியால் மட்டுமே சிறந்த உயரத்திற்கு சென்று விடும். அவ்வாறாக மக்களின் புகழ்ச்சியால் உயரம் சென்றது தான் இந்த இருட்டுக்கடை ஹல்வா. இவர்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இன்னமும் டவுணில் அதே எட்டுக்கு எட்டு ரூமில் வைத்து தான் ஹல்வாவை விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். கிட்டதட்ட 124 வருடங்களாக கிருஷ்ண சிங்கின் குடும்பம் தான் இந்த கடையை நடத்தி வருகின்றனர்.


சரி, எப்படி ஹல்வாவை வாங்கலாம்?
சுட சுட இருட்டுக் கடை ஹல்வாவை நீங்கள் ருசித்தே ஆக வேண்டுமானால் நெல்லை டவுண்க்கு வந்து ஒரு நீண்ட வரிசையில் நின்று தான் வாங்கி ஆக வேண்டும், திருநெல்வேலி முழுக்க பல ஹல்வா கடைகள் இருக்கும். ஆனால் அவைகள் ஏதும் இருட்டுக்கடைகள் இல்லை. இருட்டுக்கடை என்பது திருநெல்வேலியில் டவுணில் மட்டும் தான் இருக்கிறது. தற்போது அதிகாரப்பூர்வ தளம் திறந்து ஆன்லைனிலும் விற்பனையை துவங்கி இருக்கிறார்கள். என்ன இருந்தாலும் நேரில் சென்று அந்த சூடான ஹல்வாவை கையில் வாங்கி ருசிப்பது போல சுவை ஆன்லைனில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

இருட்டுக்கடை ஹல்வாவின் ஆன்லைன் தளம்: https://www.iruttukadaihalwashop.com
“ ஒரு ஸ்வீட் ஒரு மாநகரையே அடையாளப்படுத்துகிறது என்றால் அதன் தரத்தையும், அதற்கு பின்னால் உழைத்தவர்களையும் யோசித்துப் பாருங்கள், இருட்டுக்கடை இன்னும் எத்துனை நூற்றாண்டு சென்றாலும் திருநெல்வேலியின் ஆகச்சிறந்த அடையாளமாக திகழும் என்பதில் ஐயமில்லை “