Egg Price in Namakkal-தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகி கேரளா செல்லும் ஒவ்வொரு முட்டைக்கும், கேரள அரசு 2 பைசா வரி விதிப்பதால், முட்டை வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய முட்டை உற்பத்தி மையமாக விளங்கி வருவது நாமக்கல் மாவட்டம், கிட்டதட்ட 1,100 கோழிப் பண்ணைகள் மூலம், தினசரி 6 கோடி முட்டைகள் இந்த பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த முட்டைகள் தமிழகத்தின் ஏனைய பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒரு சில வட இந்திய பகுதிகளுக்கும், துபாய், ஏமன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து லாரிகள் மூலம் கேரளா செல்லும் ஒவ்வொரு முட்டைகளுக்கும் எல்லைப் பகுதிகளில், 2 பைசா வரி விதிக்கப்படுவதாக தமிழக முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் ஒரு முட்டை அடுத்த மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் போது, கிடைக்கும் இலாபமே ஒரு முட்டைக்கு 3 பைசா தான் என்னும் போது வரி என்னும் பெயரில் 2 பைசாவை புடுங்கி கொண்டால் அதில் என்ன இலாபம் இருக்கும்.
பெரும்பாலும் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யும் நாமக்கல் முட்டை வியாபாரிகள் அனைவரும் தற்போது நஷ்டத்தையே சந்திக்கிறார்களாம், ஒட்டு மொத்த காசையும் போட்டு ஏற்றுமதி செய்தால், அவர்கள் இலாபத்தை வரி என்ற பெயரில் பிடுங்கி கொண்டால், வியாபாரிகள் நாங்கள் எப்படி பிழைப்பது? என நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் புலம்பி வருகின்றனர்.