எந்த வித காரணமும் இல்லாமல் வங்கிகள் முத்ரா கடன் தர மறுத்தால், வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
பொதுவாக கடன் என்றாலே வங்கிகள் இழுத்து அடிப்பது வாடிக்கை தான், அது போக அரசுத் திட்டங்களின் கீழ் வருகின்ற கடன்கள் என்றால் வங்கியே சரணாகதி என்று இருந்தால் கூட கடன் கிடைப்பது என்பது மிக மிக அரிது தான், அந்த வகையில் எல்லா விதமான ஆவணங்கள் இருந்தும் கூட, தொழில் முனைவோர்களுக்கான முத்ரா கடனை வழங்குவதற்கு, பல வங்கிகள் இழுத்தடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
சரி, முத்ரா கடன் என்பது முதலில் என்ன?
பிரதான் மந்திரி முத்ரா திட்டம் என்பது சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் 10 இலட்சம் வரை கடனாக வழங்கும் ஒரு திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் கடன் பெற வேண்டும் எனில் முதலில் தங்களது நிறுவனத்தை மத்திய அரசின் சிறு குறு தொழில் அமைப்பின் கீழ் பதிவு செய்து இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த கடனுதவி என்பது வழங்கப்படுகிறது.
சரி,முத்ரா கடனில் தற்போது இருக்கும் பிரச்சினைகள் என்ன?
பொதுவாக ஒரு தொழில் முனைவோர் அனைத்து ஆவணங்களையும் வங்கிகளில் சமர்ப்பித்த பின்னரும் கூட வங்கிகள் முத்ரா கடனுக்காக, அவர்களை இழுத்து அடிக்கிறார்களாம், இது தான் வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டு, இந்த குற்றச்சாட்டு நேரடியாக மத்திய நிதி அமைச்சகத்திடம் செல்லவே, நிதி அமைச்சர் ’இனி யாராவது அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பின்னரும் கூட முத்ரா கடனுக்காக இழுத்து அடித்தால், வங்கிகள் மற்றும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்து இருக்கிறார்.