Chennai Rain - சென்னையை அச்சுருத்தி வரும் மழை மக்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, சென்னையை நம்பி இருக்கும் பல தொழில்களுக்கும்,நிறுவனங்களுக்கும் பெருமளவில் பாதிப்பை கொடுக்கிறது.
Chennai Rain - சென்னையில் நாளை (அக்டோபர் 16) ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நேற்றில் (அக்டோபர் 14) இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது. விடாமல் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஐடி நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரியும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர், தற்போதே பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் சென்னை முழுக்கவே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
தொழில் மையமாக அறியப்படும் சென்னை, வருடம் வருடம் ஏதாவது ஒரு பேரிடரைச் சந்தித்து தான் வருகிறது, அதற்கு தீர்வு தான் என்ன என்பது அரசுக்கும் புரியாத புதிராக இருக்கிறது, பெருகி வரும் மக்கள் தொகை, பெருகி வரும் நிறுவனங்கள், பெருகி வரும் கட்டிடங்கள், நீர் வழியை மறித்துக் கட்டப்பட்டு இருக்கும் பல வீடுகள், தூர்வாறப்படாத பல ஏரிகள், குப்பைகளால் நிரம்பி இருக்கும் நீர் நிலைகள், மாறி வரும் சூழல்கள் இவைகள் தான் சென்னையின் பேரிடர்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.
பேரிடரால் பெரும் வணிகத்தை இழக்கும் சென்னை
சென்னையை அச்சுருத்தி வரும் மழையால் மக்களும், வியாபாரிகளும், தொழில் நிறுவனங்களும் தங்களது பெரும் வணிகத்தை இழந்து நிற்கின்றன. ஒரு நாள் மழைக்கே சென்னையில் 10,000 ரூபாய் கோடி மதிப்பிலான வணிகம் தடைபட்டு நிற்கிறதாம், ஆங்காங்கே மழையில் நிற்கும் காய்கறி, பழ லாரிகளால், பொருட்கள் லாரியிலேயே அழுகிப் போகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது, காய்கறிகள், பழங்கள், பெட்ரோல், டீசல் லாரிகள், ஏற்றுமதிகள், இறக்குமதிகள், உற்பத்திகள் என அத்துனையும் ஒரே நாளில் முடங்கிப் போனதால் சென்னை பெரும் வணிக இழப்பை சந்தித்து இருக்கிறது.
மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இன்னும் பெரும் வணிக இழப்பை சென்னை சந்தித்திக்க வாய்ப்புகள் இருக்கிறதாம், வணிக நிறுவனங்களும், தொழிலகங்களும் இன்னும் ஒரு வாரத்திற்கு உற்பத்தியை பற்றி யோசிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் பாதிக்கப்பட்டு இருப்பதால் வியாபரிகளுக்கு பொருள் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
" ஒவ்வொரு நிறுவனமும், வியாபாரிகளும், தொழில்களும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை சம்பாதிக்கும் மொத்த வணிகமதிப்பையும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை, சென்னையை ஆட்டி படைக்கும் மழை எடுத்து விட்டு சென்று விடுவதாக சிறு குறி தொழில் முதலாளிகள் வேதனையில் கருத்து தெரிவித்து வருகின்றனர் "